Saturday, 17 May 2014

தலைமைக்கு ஓர் அன்பான வேண்டுகோள் 

1. கழகதிற்க்ககா  உழைத்த. தலைவர் கலைஞ்கர்  அவர்களை மட்டுமே வாழ்நாள் முழுவதும்
    தலைவராக ஏற்றுக்கொண்ட  (வீரபாண்டியர்,கோ.சி.மணி ,துரைமுருகன் ,) போன்ற பலர்
    கழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும்.

2.அ.தி.மு.

Sunday, 11 May 2014

மீனம்: (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீனம்: (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசி அன்பர்களே!
இதுவரை மீன ராசிக்கு 4-ல் இருந்த குரு- இப்போது 5-ஆம் இடம் கடகத்துக்கு மாறுகிறார். அங்கு அவர் உச்சமாக இருப்பதோடு- வர்க்கோத்தமமாகவும் இருக்கிறார். அதாவது ராசிச் சக்கரத்திலும் நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்திலிருந்தால் வர்க்கோத்தமம் என்று பெயர். வர்க்கம் + உத்தமம்= வர்க்கோத்தமம். உத்தமம் என்ற சொல்லே இது ஒன்றுக்குத்தான் உண்டு. அதனால் அந்த கிரகம் (வர்க்கோத்தமம். பெற்ற கிரகம்) எந்த நிலையில் இருந்தாலும் எந்த ஆதிபத்தியம் பெற்றாலும் தன் பலனை நல்ல பலனாகச் செய்வார்.

கடந்த காலத்தில் மீன ராசிக்கு 4-ல் மிதுனத்தில் இருந்த குரு நல்ல வருமானம்; வறுமை, தரித்திரமில்லாத வாழ்க்கையைத் தந்தபோதிலும் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்திருப்பீர்கள். குறிப்பாக 5-ஆம் இடம் புத்திர ஸ்தானத்துக்கு 12-ல் மிதுனத்தில் இருந்ததால், பிள்ளைகள் வகையில் தவிர்க்க முடியாத செலவுகளும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலைகளும் இருந்தது எனலாம். அத்துடன் அட்டமச் சனியின் பாதிப்பும் உங்களை வந்துசேர்ந்தது. இங்குமங்கும் அலைச்சல், பயணம், அதனால் உடல்நலக்குறைவு, சோர்வு ஆகிய பலனைச் சந்தித்தீர்கள்.

அட்டமச் சனியால் சிலர் குடியிருப்பு மாறினார்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறினார்கள். சிலர் உத்தியோகரீதியாக இடம் மாறினார்கள். சிலர் உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி வந்துவிடுமோ என்ற சந்தேகத்தோடு நாளையும் பொழுதையும் தள்ளிவந்தார்கள். சனியோடு ராகுவும் சேர்ந்து கேதுவைப் பார்த்ததால், எந்த வேலையைத் தொட்டாலும் உடனுக்குடன் முடிக்கமுடியாமல் விரக்தியடைந்தீர்கள்.

ஒருசிலருக்கு அட்டமச் சனியாலும் 4-ஆம் இடத்துக் குருவாலும் விபத்து, வைத்தியச் செலவு, ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டது. எனக்குத் தெரிந்த மதுரை அன்பரும்- சென்னை அம்மாளும் திருச்செந்தூருக்கு முருகனைக் கும்பிடப் போனார்கள். கடலில் குளித்துவிட்டுத் திரும்பியபோது அலைவந்து இழுத்துச்சென்று தள்ளிவிட்டது. அன்பருக்கு கால் சுளுக்கு- ரத்தக்கட்டுதான். அந்த அம்மாளுக்கு கால் எலும்பு முறிவு. அன்பர் மதுரை வந்து எளிய முறையில் வர்மக்கலை வைத்தியரிடம் காண்பித்தார். அந்த அம்மாள் சென்னைக்குப் போய் ஆபரேஷன் செய்துகொண்டார். காலில் பிளேட் வைத்தார்கள். இரண்டு லட்சம் ருபாய் செலவு. அன்பர் குறைந்த வருவாய் உடையவர். அந்த அம்மாள் வசதி படைத்தவர். இருவரும் வெவ்வேறு நபர்கள் என்றாலும், இருவரும் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. அட்டமச்சனி, அட்டம ராகு ஒரே மாதிரி இடத்தில் (கடலில்) விபத்தை ஏற்படுத்தி- சனி என்றாலே முழங்கால்- காலில் பிரச்சினையை உண்டுபண்ணிவிட்டது. குரு ராசிநாதன் என்பதால், அவரவர் வசதி, தகுதிகேற்ப வைத்தியச் செலவை உண்டுபண்ணிவிட்டார்.

ஆக கிரகம் அது செய்யவேண்டிய வேலையைத் தவறாமல் செய்யும். ஆனால் அவரவர் வழிபாடும் தெய்வமும் பூஜையும் காத்து நிற்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன மாதிரி, கெட்டவர்களுக்கு கடவுள் அள்ளிக்கொடுப்பார்; ஆனால் கைவிட்டுவிடுவார். நல்லவர்களுக்கு சோதனை வரும். ஆனால் கைவிடமாட்டார்.

இதேபோல இன்னொரு நிகழ்ச்சி! ஒரு அன்பர் வேலை, வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம். ஆனால் தெய்வ பக்தியானவர். அவர் மனைவி எதற்குமே ஆசைப்படாதவர். அஸ்வினி நட்சத்திரத்தில் கோடி உடுத்தினால் வசதிவாய்ப்பு பெருகும் என்பது சாஸ்திரம். அதேபோல ஒரு வியாழக்கிழமை அஸ்வினி கூடிய நாளில் இரண்டு சேலை, அரை டஜன் ரவிக்கைத் துணி, அவருக்கு வேஷ்டிச் சட்டை எடுத்துக்கொடுத்து மனைவியையும் கட்டிக்கொள்ளச் சொன்னேன். அவரும் மனைவியிடம் துணிகளைக் கொடுத்தார். அந்த அம்மாள் ஒரு சேலை, ஒரு ரவிக்கை துணியை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியைத் திருப்பிக்கொடுத்து விட்டார். அவர், "அடி அசடே! எல்லாம் உனக்குத்தானே!' என்றபிறகு வாங்கிக்கொண்டார். அவ்வளவு யதார்த்தவாதி. அந்த அம்மாள் கருவுற்றிருந்த காலம் அரசு இலவச மருத்துவமனையில்தான் பார்த்து வந்தார். 10-ஆவது மாதம்- அதிகாலை இடுப்பு வலி வந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்குப் போக ஆட்டோவை அழைத்து வரும்படி சொல்ல, அவர் கையில் இரண்டு ரூபாய் மட்டுமே இருந்ததால் ""கொஞ்சம் பொறுத்துக்கொள். விடியட்டும். தெரிந்த ஆட்டோவை அழைத்து வருகிறேன்'' என்றார். அந்த அம்மாளும் கடவுளை தியானித்தபடியே பொறுத்துக்கொண்டார். வலி அதிகமாகவே பக்கத்துவீட்டு அம்மாளை அழைத்துவந்து துணைக்கு வைத்துவிட்டு ஆட்டோவை அழைத்து வரப்போய்விட்டார் கணவர். அவர் திரும்புவதற்குள் ஆண் குழந்தை பிறந்துவிட்டது. கடவுள் கருணாமூர்த்தி! சோப்பு, விளக்கெண்ணை இரண்டு ரூபாய் செலவிலேயே பிரசவம் பார்த்துவிட்டார். இதுவே பணக்காரர்களாக இருந்தால் பத்தாயிரம் இருபதாயிரம் செலவு செய்து சிசேரியன்மூலம் பேறு காலம் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆக சுவாமி தாயுமானவர்- ஏழைப் பங்காளன். அதனால்தான் "வாயானை- மனத்தானை- மனத்துள் நின்ற கருத்தானை- கருத்தறிந்து முடிப்பான் தன்னை' என்று நால்வரில் ஒருவர் பாடினார்.

இப்போது 5-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் குரு உங்கள் ராசி மீனத்தைப் பார்க்கிறார். 11-ஆம் இடம் மகரத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் விருச்சிகத்தையும் பார்க்கிறார். மேலும் குருவுக்கு அதிர்ஷ்டமும் யோகமுமான இடம் 2, 5, 7, 9, 11-ஆம் இடம்தான். அப்படிப்பட்ட 5-ல் குரு உச்சம்! வர்க்கோத்தமம் என்பதாலும், நல்ல இடங்களைப் பார்ப்பதாலும் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகப் பெயர்ச்சியாகும். இதுவரை அட்டமத்துச் சனியும் மங்குசனியுமாக இருந்தவர், இனி பொங்குசனியாக மாறிப் பொலிவைத் தருவார்.

5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம், மகிழ்ச்சி, திட்டம், எண்ணம், குரு உபதேசம், பக்தி, பூர்வ புண்ணியம் ஆகியவற்றை குறிக்கும் இடம். அங்கு புத்திரகாரகனும் தனகாரகனுமான குரு, அத்துடன் ராசிநாதனுமான குரு உச்சமாக அமர்ந்திருப்பது யோகம்தான். மக்கள்பேறு, மகிழ்ச்சி, உண்மையான நண்பர்கள், விசுவாசமான வேலையாட்கள், சகலவிதமான சம்பத்து, செல்வம், பாக்கியம், மந்திர உபதேசம், பக்தி வழிபாடு, இஷ்ட தெய்வ- குலதெய்வ வழிபாடு, பூஜை, தாய்மாமன் ஆதரவு, பாட்டனார் அல்லது முன்னோர் சொத்துக்கிடைத்தல் ஆகிய பலன்கள் நடக்கும். உங்களுடைய நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். ஆசைகளும் ஈடேறும்.

திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு ஆண் வாரிசும் பெண் வாரிசும் உண்டாகும். திருமண வயதில் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நிறைவேறும். பருவ வயதுடைய பெண்களுக்கும் பூப்பெய்தல் சடங்கு போன்ற சுபமங்கள காரியங்களும் நிறைவேறும்.

படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்றபடி தரமான வேலைவாய்ப்பும் முன்னேற்றமும் ஏற்படும். பதவியில் இருப்போருக்குப் பதவி உயர்வும், விரும்பிய இடப்பெயர்ச்சியும், ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம்! வாழ்க்கை தரத்தில் மேன்மையும் மனநிறைவும் உண்டாகும். "ஏனோ மனிதன் பிறந்துவிட்டான். அவன் வீணேமரம்போல் வளர்ந்துவிட்டான்' என்றில்லாமல், வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது; வாழ்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று மீன ராசிக்காரர்கள் சாதனை படைக்கலாம்.

கட்டிக்கொடுத்த பெண் பிள்ளைகள் வகையில் சிலருக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு, மாமியார் அல்லது நாத்தனார் பிடுங்கல் தாங்காமல் புக்ககத்தில் இருந்து பிறந்தகத்துக்கு வந்துவிட்ட பெண்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் பெற்றோர்களுக்கு, குருப்பெயர்ச்சி மாறுதலையும் ஆறுதலையும் தரும்.

9-ஆம் இடம் தகப்பனார், பூர்வபுண்ணியம், பாக்கிய ஸ்தானம் ஆகும். பூர்வீகச் சொத்துகளை அல்லது தனது சுயசம்பாத்திய சொத்துகளை இதுவரை அனுபவிக்கமுடியாத நிலை இனி மாறிவிடும்.

பெரியோர்களாலும் பிள்ளைகளாலும் உங்கள் கருத்துக்கு ஆதரவில்லாத வகையில், சொத்துகளை அனுபவிக்க முடியாமலும் விற்க முடியாமலும், கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக அவதிப்பட்டவர்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தையும் அனுகூலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும். தெய்வத் திருவருளினாலும் குருவருளினாலும் எல்லாவிதமான சௌகர்யங்களும் நன்மைகளும் பாக்கியங்களும் வசதிகளும் ஏற்படும். சொத்துப் பிரச்சினைகளில் உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி காணப்பட்டால், திருச்சி- பொன்னமராவதிப் பாதையில் (புதுக்கோட்டை வழி) செவலூர் பிரிவு ஸ்டாப் இறங்கி- 2 கிலோமீட்டர் நடந்தால் செவலூரை அடையலாம். அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிவாலயம் உள்ளது. சுவாமி பூமிநாதர்; அம்மன் ஆரணவல்லி. அங்குசென்று ருத்ராபிஷேகம் அல்லது சங்காபிஷேகம் பூஜை செய்யவும். சுவாமி லிங்கத் திருமேனி. 16 பட்டைகள் கூடியது. அபிஷேகத் திரவியங்கள் எல்லாம் வெளியில் சிந்தாது; சிதறாது. பூமிக்குள் போய்விடும். அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக கையில் பதுமம் (தாமரை) வைத்திருப்பார். தொல்பொருள் ஆராய்ச்சி நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அந்த எல்லைக்குப் போய் வந்தபிறகுதான் நானே 70 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் வாங்கினேன். வீடு கட்டினேன். என்னுடைய பல நண்பர்களும் அந்த எல்லைக்குப் போய் பூஜை செய்த பிறகு வீடு, கட்டடம், பிளாட் போன்ற நன்மைகளை அடைந்தனர் என்பது அனுபவ உண்மை. அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், அலைபேசி: 98426 75863-ல் விவரம் அறியலாம்.

9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5-ஆம் இடமும் பூர்வ புண்ணிய ஸ்தானம். (5-க்கு 5 =9-ஆம் இடம்) அதற்கு ராசிநாதனான குரு பார்ப்பது சிறப்பு. அத்துடன் அவர் 10-க்குடையவர்- அவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆன்மிக கிரகம் ராகு கன்னியிலிருந்து குருவையும் 5-ஆம் இடத்தையும் பார்க்க, கேதுவும் மீனத்தில் நின்று குருவின் பார்வையைப் பெறுவதால் ஆலய வழிபாடு, ஆன்மிகத் தொடர்பு, மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளையும் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றலாம். குலதெய்வத்தின் அருளுக்கும் பாத்திரமாகலாம். சிலருக்கு ஜோதிடம், கைரேகை, ஆரூடம், பிரஸ்னம், அருள்வாக்கு சொல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

அந்தக் காலத்தில் ஒரு ஊரில்- குறிப்பிட்ட வட்டத்துக்குள்- அங்காளி பங்காளி எல்லாம் ஒரு குரூப்பாக அடுத்தடுத்து வாழ்ந்தார்கள். அதனால் எல்லாரும் முறையாக குலதெய்வ வழிபாட்டுக்கு தலைக்கட்டு வரி செலுத்தி சேர்ந்து கும்பிட்டார்கள். அதெல்லாம் மூன்று தலைமுறைக்கு முன்பு அல்லது 80-100 ஆண்டுகளுக்கு முந்திய சமாச்சாரம். இப்போது பல இடங்களுக்குப் பறந்துசென்ற பறவைகள்போல படிப்பு, வேலை, வெளிநாடு என்று ஆங்காங்கே சிந்திச் சிதறிப் போய் செட்டிலாகி விட்டார்கள். விவரமறிந்த முதியோர்களும் பெரியோர்களும் காலாவதி ஆகிவிட்டார்கள். அதனால் இப்போது உள்ளவர்களுக்கு (பலருக்கு) குலதெய்வமும் தெரியாது; எல்லையும் தெரியாது; வழிபாட்டு முறையும் தெரியாது. கோடாங்கி குறி கேட்கலாம் என்றாலும், அதற்குரிய உண்மையான, திறமையான ஆட்கள் இல்லை. "ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடாங்கி' என்ற மாதிரி வியாபார நோக்கோடு பிஸினஸ் செய்கிறவர்கள்தான் இருக்கிறார்கள். எனவே அவரவர் இஷ்டதெய்வத்தையும் மனம்விரும்பும் தெய்வத்தையும் பிடித்த தெய்வத்தையும் வழிபட வேண்டியதுதான். "யாதொரு தெய்வம் கொண்டீர்- அத்தெய்வமாகி யாதொரு பாகனார் தாம் வருவார்' என்பதும்; "எத்தெய்வம் கொண்டாடினாலும் அது முக்கண் ஆதியைப் போய் அடையும்' என்பதும் சிவஞான போதம். ஆகவே நாமம் போடுகிறவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியையும் விபூதி பூசுகிறவர்கள் திருவண்ணாமலை ஈஸ்வரனையும், அம்பாளைக் கும்பிடுகிறவர்கள் காஞ்சி காமாட்சியையும் வழிபடலாம்.

11-ஆம் இடத்தை 10-க்குடையவரும் ராசிநாதனுமான குரு பார்ப்பதால், தொட்டதெல்லாம் தோல்வியின்றி ஜெயமாகும். நீண்ட நெடுங்காலமாக நடந்துவந்த வில்லங்கம், விவகாரத்தில் சாதகமான திருப்பமும் நல்ல தீர்ப்பும் எதிர்பார்க்கலாம். மூத்த சகோதர- சகோதரி வகையிலும் சகாயமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம்.

கடக குரு உங்கள் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அவர் ராசிநாதனும் ஆவார். உச்சம்! உங்கள் செல்வாக்கு, திறமை, செயல்பாடு, ஆற்றல், கீர்த்தி, பெருமை, அந்தஸ்து ஆகியவையெல்லாம் உயர்வடையும். உழைப்பிற்கேற்ற ஊதியமும், திறமைக்கேற்ற பெருமையும், பண்புக்கேற்ற பாராட்டும் கிடைக்கும். இதுவரை பட்டபாட்டுக்கு பலன் உண்டாகும். சமூக நற்பணி மன்றங்களிலும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், அறக்கட்டளை, ட்ரஸ்ட் போன்ற ஸ்தாபனங்களில் முக்கிய பொறுப்புகளும் பதவிகளும் தேடிவரும். பட்டம், பதவி, அந்தஸ்து வந்ததும், இதுவரை உங்களை உதாசீனப்படுத்தி ஓரம் கட்டி ஒதுக்கிவைத்த உற்றார்- உறவினர்களும் உங்களைத் தேடிவந்து பொன்னாடை போர்த்தி பாராட்டுவார்கள்.

இதுவரை எந்தக் காலத்திலும் அன்ன ஆடை தரித்திரம் இல்லையென்றாலும், குடியிருப்புக்கு குறைவில்லையென்றாலும், எந்தவிதமான சேமிப்பும் இல்லாமல் வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டி வறட்டுக் கௌரவமான வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். சிலர் பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி நல்ல வேலையில் அமர்த்தி, அவர்கள் சம்பாத்திய நிழலில் "ரிட்டையர்டு லைப்' வாழ்ந்து வரலாம். அப்படிப்பட்டவர்களும் இந்த குருபெயர்ச்சியில் ஓய்வு காலத்திலும் ஏதாவது உபவருமானம் பார்க்கும் வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து சம்பாதிக்கலாம். சம்பாதியத்தில் ஒரு பகுதி கடனுக்கும் வட்டிக்கும்- ஒரு பகுதி குடும்பச் செலவுக்கும், ஒரு பகுதி எதிர்காலத்திட்டத்துக்கும் (எல்.ஐ.ஸி- ஆர்.டி., எப்.டி போன்ற வகையில்) என்று சேமித்து பட்ஜெட் போட்டு பக்குவமாக வாழலாம். இதற்காகவே குருப்பெயர்ச்சிக்கு ஒரு "ஓ' போடலாம்! "ஓ'.

13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு தன் சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் உச்சமாகவும் வர்க்கோத்தமமாகவும் சஞ்சரிக்கிறார். இக்காலம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அதிகாரப்பதவியாளர்களின் ஆதரவும் நட்பும் கிடைப்பதால், உங்கள் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்ப்புகள் விலகும். வசந்தமான வாழ்க்கை சொந்தக்காரர்கள் மத்தியில் மதிப்புக்குள்ளாக்கும்! சேமிப்புகள் பெருகும்!

பரிகாரம்: கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் எஸ்.புதூர் என்ற செங்கரங்குடிப்புதூர் உள்ளது. ஒரு காலத்தில் குபேரன் தன் செல்வங்களை இழந்து, சப்த ரிஷிகள் தயவால் இங்குவந்து ஸ்ரீசனத்குமரேஸ்வரர், தாயார் ஸ்ரீசௌந்திர நாயகி அம்மனையும் வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதாக வரலாறு. இங்கு தட்சிணாமூர்த்தி நவகிரகங்களைப் பீடமாக அமைத்து அதன்மீது இருக்கிறார். அங்கு சென்று வழிபட்டால் சிறப்புகள் அடையலாம்.

29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
குரு சனியின் சாரம். (பூச நட்சத்திரம்). சனி லாப விரயாதிபதி என்பதால் லாபமும் உண்டு; நஷ்டமும் உண்டு. வரவும் உண்டு; செலவும் உண்டு. என்றாலும் எல்லாம் ஆதாய விரயம், சுபவிரயம்தான். சிலருக்குப் பெண்களால் பிரச்சினை ஏற்பட்டு நிவர்த்தியாகும். உடல்நலம், ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் என்ற ஊரில் திருநறையூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் சித்தநாதசாமி கோவிலுக்கும் இடையில், ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ஸ்ரீஇராமநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு மங்கல சனீஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் தசரதர் சனீஸ்வரரை வணங்கியபடி இருக்கிறார். சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.30-க்குள் மாந்திக்கும், 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் சனி பகவானுக்கும் அபிஷேகம் நடக்கும். சனி பகவான் மந்தாதேவி- ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி சமேதரராக அருள்கிறார்.

28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்;
22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
புதன் நட்சத்திரமான ஆயில்யத்தில் இரண்டு கட்டமாக குரு சஞ்சாரம் செய்யும் இக்காலம் நற்காலம். கடந்த கால கசப்பான அனுபவங்களெல்லாம் மாறி இனிப்பான அனுபவங்களாக மாறிவிடும். வாயில் போட்ட நெல்லிக்கனி உமிழ்நீர் பட்டதும் துவர்ப்புச் சுவை மாறி இனிப்புச் சுவையாக மாறுவதுபோல! மற்றவர்களுக்காக- பெருமைக்காக செலவு செய்வதை குறைத்துக்கொண்டு, குடும்பத்தினருக்காக செலவு செய்யுங்கள். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றலாம். ஊனமுற்றோர் அல்லது முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம், ஆடை தானம் செய்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு அகலுவது உறுதி.

பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல் வழியில் (7 கிலோமீட்டர்) நாச்சியார் கோவில் இருக்கிறது. அங்கு சீனிவாசப் பெருமாள் கோவிலில், பெருமாள் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இங்கு கல் கருடன் சந்நிதியில், கருடன் கல்விக்கிரகமாக அருள்பாலிக்கிறார். அவர் திருமேனியில் ஒன்பது இடங்களில் நவநாகர் உருவம் உண்டு. வருடத்தில் இருமுறை கல்கருடனே உற்சவராக புறப்பாடாகி வெளியே வரும்போது, முதலில் 4 பேர், பிறகு 8 பேர், பிறகு 16 பேர், அடுத்து 32 பேர், தூக்குமளவு எடை கூடிக்கொண்டே போகும். உலா முடிந்து வந்ததும் முன்போல 32 பேர், 16 பேர், 8 பேர் என்று தூக்கி முடிவில் 4 பேர் விக்கிரகத்தை யதாஸ்தானத்தில் வைக்கும்படி எடைகுறைந்து கொண்டே வரும். வியாழக்கிழமைதோறும் கல் கருடனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். 11 வாரம் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் வேண்டியது நிறைவேறும்.

குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை குரு- கேது சாரத்திலும், 22-12-2014 முதல் 26-3-2015 வரை புதன் சாரத்திலும் சஞ்சாரம். இக்காலத்தில் 17-12-2014 முதல் 26-3-2015 வரை குரு வக்ரகதி. இதில் சிலருக்கு நற்பலனும். சிலருக்கு துர்ப்பலனும் நடக்கலாம். வக்ரம் எல்லாருக்கும் கெடுதல் இல்லை. பாடம்பிடிக்காத மாணவனை ஆசிரியர்கள் கண்டிப்பதுபோல திருத்தலாம். அதை ஏற்றுக்கொள்வது நல்லது.

பரிகாரம்: காளஹஸ்தி சென்று வழிபடலாம். அல்லது உத்தமபாளையம் (தென்காளஹஸ்தி) சென்று வழிபடலாம். அல்லது மாயவரம் அருகில் பேரளம் வழி திருப்பாம்புரம் சென்று வழிபடலாம்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் சாதிக்கச் செய்யும். குடும்பத்தில் நல்லவை நடக்கும்.

பரிகாரம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் இஞ்சினீயரிங் கல்லூரி போகும் வழியில், ஓம் சிவப்பிரகாசர் ஜீவசமாதி சென்று வழிபடவும். பூரட்டாதியில் குரு பூஜை.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி போட்டி, பொறாமைகளை வென்று முன்னணியில் வெற்றி நடை போடச்செய்யும். தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் எல்லாம் திருப்தியளிக்கும்.

பரிகாரம்: கம்பர் காலத்தில் வாழ்ந்த அருட்கவிஞர் ஒட்டக்கூத்தர்- தக்கயாகபரணி பாடி புகழ் பெற்றவர். தாராசுரம் வீரபத்திரன் கோவிலுக்கு பின்புறம் இவரது சமாதி உள்ளது. (கும்பகோணத்திலிருந்து 2 கிலோமீட்டர் தாராபுரம்) சென்று வழிபடலாம்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி குடும்ப ஒற்றுமை, செல்வச் செழிப்பு, நூதன பொருள் சேர்க்கை, ஆடை, அணிகலன் சேர்க்கை ஆகிய பலன்களைத் தரும்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு வடக்கே 12 கிலோமீட்டரில் திருவையாறு உள்ளது. இந்தக் கோவிலில், சண்டேசர் சந்நிதி பக்கம் அகப்பைச் சித்தர் புற்று மூடிய நிலையில் அருந்தவம் இயற்றினார். திருவையாறு சிவலிங்கப் பெருமான் இவர் மூலம்தான் தன் இருப்பிடம் காட்டி, கரிகால்சோழனால் இக்கோவில் எழுப்பப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மீனம்)

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மீனம்)

மீன இராசி அன்பர்களே…

19.6.2014 உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5-ம் இடத்திற்கு வந்து குரு பகவான் அமர்க்களமாக அமர போகிறார்.

அடேங்கப்பா இனி தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் யோகங்கள் வந்து சேரும்.

வழி தெரியாமல் அடர்ந்த காட்டில் அல்லல்பட்டவர்களுக்கு ஒத்தையடி பாதை தென்படுவதுபோல, முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும்.

இதுவரையில் தேவையில்லா மனக்குழப்பத்தை கொடுத்து வந்த குரு பகவான், உங்கள் இராசிக்கு 5-ஆம் வீட்டில் அமர்ந்ததும் இனி நீங்கள் யோகசாலிகள்தான்.

அதுமட்டுமல்ல, உடல்நிலையில் பலசாலியாகவும் திகழ்வீர்கள்.

ஆம். குரு பகவான், 5-ஆம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியை பார்க்கிறார்.

அத்துடன், 9-ஆம் இடத்தை, அதாவது பாக்கிய ஸ்தானத்தையும், 11-ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

இனி என்ன கவலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.

நோய்நொடியிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல உடல்நலம் பெறுவீர்கள்.

வாடகை வீட்டில் படாதபாடுபட்ட நீங்கள், இனி சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியோடும், குடும்பத்தில் தன, தான்யத்தோடும் வாழ்வீர்கள். நல்லவை அனைத்தும் கிடைக்கும்.

எப்படி சொல்கிறேன் என்றால், 5-ம் இடம் யோகமான இடம். கார், பங்களா என்று வசதியாக கூட வாழ வழி செய்வார் குருபகவான்.

பிள்ளைகளின் திருமணத்தை உடனே நடத்தி கொடுப்பார்.

எதிர்காலம் பற்றி கவலை இல்லை. இனி எல்லாம் நல்ல காலம்தான் என்கிற மனஉறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும்.

தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்னைகள் தீரும். கவலை எல்லாம் பறந்தோடும்.

உத்தியோகம், வியபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

பொன், பொருள் நன்றாக சேரும். அச்சத்தை போக்குவார் உச்ச குரு. சரி 5-ம் வீட்டில் இருக்கும் குரு, இப்போது உங்களுக்கு சொல்ல விரும்பும் ஆலோசனை என்னவெனில், “குருவாகிய நான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன்.

நீங்கள் உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

குழப்பத்தையும், சஞ்சலத்தையும் விடுங்கள். “முடியும்” என்ற எண்ணத்தில் இருங்கள்.

நீங்கள் முடிசூடா மன்னர்தான்” என்கிறார். விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி நம்பிக்கையோடு வெற்றிபடியில் கால் வையுங்கள்.

ஸ்ரீஅஷ்டலஷ்மிகளும் உங்களை தேடி வருவார்கள். வளங்களை வரங்களாக தருவார்கள்.